இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் 40 ஆயிரம் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், தவறாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட, ஆயிரத்து 224 திருக்கோயில்களுக்குச் சொந்தமான எட்டாயிரத்து 150 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள திருக்கோவில் சொத்துக்களை மீட்போம்: திருக்கோவில் பணியாளர்களை பாதுகாப்போம் என்று வாயால் சொல்லும் ஆட்சியாளர்கள், ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே கொடுக்க உள்ளதாக செய்திகள் வருவதாக அவர் குறைகூறியுள்ளார்.
இதனால், திருக்கோயில்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அறநிலையத்துறை ஆணையர் திருக்கோயில்களின் பணிபுரியும் சுமார் 40 ஆயிரம் தொகுப்பூதிய பணியாளர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தற்காலிகப் பணியாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும், இவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தேவையற்ற முடிவினை கைவிட்டு, நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்தவாறு குறைந்த சம்பளத்தில் நீண்ட காலமாக தினக் கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ் நாடு அரசை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post