மருத்துவத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்திய தமிழகத்தில் முத்தாய்ப்பாக தொடங்கப்பட்ட திட்டம் அம்மா முழு உடல் பரிசோதனை மையம். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2018ம் ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் இந்த கனவுத்திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த மையத்தால் பயன் அடைந்துள்ளனர்.
கோல்டு, டைமண்ட், பிளாட்டினம் என 3 வகை பரிசோதனைகள் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. கோல்டு பரிசோதனைக்கு ஆயிரம் ரூபாயும் டைமண்ட் வகை பரிசோதனைக்கு 2 ஆயிரம் ரூபாயும் பிளாட்டினம் வகை பரிசோதனைக்கு 3 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது தவிர பிளாட்டினம் பிளஸ் என்ற பிரிவும் இங்கு உள்ளது. இதற்கு 4 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 60 க்கு மேற்பட்ட பரிசோதனைகள் கொண்ட இந்த பிளஸ் பிரிவு, சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தனியார் மருத்துவமனையுடன் ஒப்பிடுகையில், முழு உடல் பரிசோதனைக்கு 4 ல் ஒரு பங்கு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. கொரோனா காலம் என்பதால், பல்வேறு இணைநோய்களுடன் இருப்பவர்கள் தங்களது உடலில் உள்ள பிரச்சினைகளை அறிந்துகொண்டு அதற்கு தகுந்தார்போல சிகிச்சை மேற்கொள்ள இந்த மையம் மிகுந்த உதவியாக உள்ளது.
இந்த மையத்தில் பரிசோதனைக்காக வருபவர்கள் காலை உணவு உட்கொள்ளாமல், காலை 7மணிக்கு வரவேண்டும். முதியவர்களாக இருக்கும் பட்சத்தில் உடன் ஒருவர் வர வேண்டும். பெண்கள் மாதவிடாய் காலத்தில் வருவதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் முன்னாதவே தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
பரிசோதனையோடு முடியாமல் அதன் பிறகு உடலின் நிலைக்கேற்ப தகுந்த மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது. சென்னை மக்கள் மட்டுமல்லாமல், வெளி மாவட்ட மக்களும் பயன்படும் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் தமிழக மக்களுக்கு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை.
நியூஸ் ஜெ. செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் யோசேப்புடன் செய்தியாளர் குணா.
Discussion about this post