விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர், 67 வயதான கிருஷ்ணன். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான அவரும், அவருடைய மனைவி சாரதாம்பாளும், ஒலக்கூர் ரயில்வே பீட்டர் சாலையில் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 19-ம் தேதி இரவு, கணவன், மனைவிக்கு இடையே கடுமையான சண்டை ஏற்பட்டு, ஆத்திரத்தில் கிருஷ்ணன் தனது மனைவி சாரதாம்பாளை அருவாமனையால் வெட்டி கொலை செய்து, அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இது குறித்து ஒலக்கூர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாரதாம்பாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, சாரதாம்பாளின் மகன், மகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, அதே ஊரில் பதுங்கியிருந்த சாரதாம்பாளின் கணவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு, பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு பெண்ணுடன் கிருஷ்ணனுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாரதாம்பாளுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கிருஷ்ணன், சாரதாம்பாளை அடித்து இடுப்பு எலும்பை உடைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இருவருக்குள்ளும் வந்த சண்டையில், கிருஷ்ணன் சாரதாம்பாளை கொலை செய்துள்ளார். கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post