சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் இறந்த பிறகு, அவருக்கு கொரோனா நெகடிவ் என குறுஞ்செய்தி வந்தது, குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த கண்ணகி நகரைச் சேர்ந்தவர் பரமேஷ்வரன்.
இவரது மனைவி உமாவிற்கு காய்ச்சல் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். உமாவிற்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டதால், அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 16ஆம் தேதி இளம்பெண் உமா உயிரிழந்தார்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் உமாவிற்கு கொரொனா தொற்று இல்லை என 18ம் தேதி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்புகொண்டு பரமேஸ்வரன் கேட்டபோது, தவறுதலாக எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டதாக பல்டி அடித்துள்ளனர்.
இதனால், உமாவின் மரணம் குறித்து குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
மருத்துவமனை நிர்வாகமும், மாநகராட்சியும் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடப்பதாக பொதுமக்கள் புகார் சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது என, அமைச்சர் தாமோ.அன்பரசன் அலட்சியமாக பதில் அளித்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செம்மஞ்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அமைச்சர் கூறியது, பொறுப்பற்ற முறையில் இருப்பதாக அருகில் இருந்தவர்களே புலம்பிச் சென்றனர்
Discussion about this post