மருத்துவப் பயன்பாட்டிற்கான ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆக்சிஜன் தயாரிப்பை மேற்பார்வையிட கண்காணிப்பு குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் நாடு முழுவதும், மருத்துவப் பயன்பாட்டிற்கான ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜனை தயாரிப்பதற்காக மட்டும் மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆலையின் செயல்பாட்டை மேற்பார்வையிட கண்காணிப்பு குழுவை அமைக்கவும் தமிழக அரசுக்கு ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில், 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து, அரசாணை பிறப்பித்துள்ளது. அந்தக் குழுவில் உதவி ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், சுற்றுச்சூழல் நிபுணர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாட்டை தினமும் கண்காணிப்பது, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி ஆலை செயல்படுவதை உறுதி செய்வது, ஆலையின் செயல்பாட்டிற்கு தேவைப்படும் தொழிலாளர்களை ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பணிகளில் கண்காணிப்புக் குழு ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு நாளும் ஆலையின் செயல்பாடு குறித்த அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Discussion about this post