அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலணிக்கு பதிலாக ஷு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் மளிகை மற்றும் கடை வியாபாரிகள் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களை பாராட்டி அவர் கேடயங்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கீரிபள்ளம் ஓடை 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரி சீரமைக்கப்படும் என்றார். கோபிசெட்டிபாளையத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு 2 கோடியே 68 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 412 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார். 1 முதல் 8ம் வகுப்பு வரையிலும் படிக்கும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நான்கு சீருடைகள் இலவசமாக வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலணிக்கு பதிலாக ஷு வழங்கும் திட்டம் முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post