தாயை பற்றி தரம் தாழ்த்தி பேசியவர்களை இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ஜெயக்குமார் மற்றும் திருவிக நகர் தொகுதி தமாகா வேட்பாளர் கல்யாணியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். மீனவர்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாகக் கூறிய முதலமைச்சர், மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையானது, ஐந்தாயிரத்தில் இருந்து 7 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி தரப்படும் என்று கூறினார்.
திமுக ஆட்சியில் இருந்தது போன்று, தற்போது தமிழ்நாட்டில் ரவுடி ராஜ்ஜியமோ, கட்டப்பஞ்சாயத்தோ கிடையாது என்று கூறிய முதலமைச்சர், சட்டம்-ஒழுங்கில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற வரியை கேட்டாலே, ஸ்டாலின் அலறுவதாகவும் முதலமைச்சர் விமர்சித்தார்.
இதேபோன்று, சென்னை திருவொற்றியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குப்பனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புகழ்பெற்ற வடிவுடையம்மன் கோவில் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். தனது தாயை அவதூறாக பேசிய ஆ.ராசா போன்ற திமுகவினர், எப்போதும் தாய்மார்களை கொச்சைப்படுத்தியும் இழிவுபடுத்தியும் பேசி வருவதாக கண்கலங்கினார்.
முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால், திமுக ஆட்சிக்கு வந்தால் தாய்மார்களின் நிலை என்னவாகும் என்றும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். தாயை பற்றி தரம் தாழ்த்தி பேசியவர்களை இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என்றும், முதலமைச்சர் உருக்கமாக தெரிவித்தது, அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும், அநாகரிக திமுகவினர் மீது பெரும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
தொடர்ந்து சென்னை ஆர். கே.நகர் தொகுதி வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷை ஆதரித்து வாக்கு சேகரித்தார். ஆர்.கே.நகர் தொகுதியானது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதி என நினைவு கூர்ந்த முதலமைச்சர், தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். மக்களின் கஷ்டம் பற்றி ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது என விமர்சித்த முதலமைச்சர், தினமும் தன்னை பற்றி பேசுவதையே ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார் என்று கூறினார். மேலும், ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் கண் விழிக்கும் போது, முதலமைச்சராகிய தனது நியாபகம் தான் அவருக்கு வரும் என்றும் விமர்சித்தார்.
Discussion about this post