ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மான்ராஜை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பொய்யைப் பேசி, அவதூறுகளை சொல்லி, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட ஸ்டாலின் துடிக்கிறார் என குற்றம்சாட்டினார். ஆனால் எப்போதும் உண்மை, நீதி, நேர்மை, தர்மம்தான் வெல்லும் என்பதால், ஸ்டாலினின் எண்ணம் நிறைவேறப்போவதில்லை என்றும் முதலமைச்சர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து ராஜபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜியை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், எங்கு பார்த்தாலும் கடல் போல் காட்சியளிக்கும் மக்களின் பேராதரவு, அதிமுகவின் வெற்றிக்கு ராஜபாளையம் தொகுதி அச்சாணியாய் அமைந்திருப்பதை உணர்த்துவதாக கூறினார்.
மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டுமென வலியுறுத்தினார். ஒவ்வொரு உயிரும் முக்கியம், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து கேட்டுக்கொள்வதாக கூறினார்.
தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்த பின்னர், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வீடில்லாத ஏழை, எளிய மக்களுக்கு கட்டாயம் வீடு கட்டித்தரப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார்.
Discussion about this post