ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரியை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தை நடிகர் ரஜினிகாந்த் நாடிய நிலையில், அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்ததால், வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்திற்கான சொத்து வரியாக 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தக் கோரி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது சட்ட ஆலோசகர் விஜயன் சுப்பிரமணியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், நடிகர் ரஜினிகாந்த் முறையாக சொத்து வரியை செலுத்தி வருவதாகவும், கடந்த பிப்ரவரி மாதம் சொத்து வரியை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ராகவேந்திரா மண்டபத்தை வாடகைக்கு விடாததாலும், முன்பதிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு பணம் திருப்பி தரப்பட்டாலும் வருவாய் இல்லையென குறிப்பிடப்பட்டுள்ளது. சொத்து வரி செலுத்த விலக்கு அளிக்க வேண்டும் என்றும், அபராதமோ, வட்டியோ விதிக்கக் கூடாது என சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தை நாடியது பற்றி சரமாரி கேள்வி எழுப்பினார். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக, நடிகர் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி அனிதா சுமந்த், அபாராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார். இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்த உடன், தாங்களாகவே வழக்கை வாபஸ் பெறுவதாக நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post