வருமான வரி கணக்கு தாக்கல், ஆதார்-பான் எண் இணைப்பு, ஜி.எஸ்.டி.வரி தாக்கல் ஆகியவற்றுக்கு ஜுன் 30 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர், டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்தியாவில், கொரோனா பாதிப்பால், பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், நிதித்துறை தொடர்பான பல முக்கிய அறிவிப்புகளை அவர்கள் வெளியிட்டனர்.
அப்போது, ஆதார்-பான் எண் இணைப்புக்கான கால அவகாசம், ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜுன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகக் கூறினர். காலதாமதமாக செலுத்தப்படும் வருமான வரிக்கான வட்டி விகிதம் 12 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தனர்.
கொரோனா பாதிப்புக்கான சிறப்பு நிதி தொகுப்பை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்றும், கொரோனா பாதிப்பு காரணமாக அவசரநிலை பிறப்பிக்கும் எண்ணம் தற்போது இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அனைத்து வங்கி ஏடிஎம் மையங்களிலும், பணம் எடுப்பதற்காக விதிக்கப்படும் சேவைக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.
Discussion about this post