திருவள்ளூர் மாவட்டத்தில், வெள்ளி பொருட்கள் செய்யும் நபரிடம் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் தேரடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 34,வயதான இவர் வெள்ளி பொருட்கள் செய்யும் தொழில் செய்து
வருகிறார். இந்த நிலையில் பெரம்பூரில் உள்ள ஒரு கடையில் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு வெள்ளி கட்டிகளை வாங்கிக்கொண்டு மின்சார ரயிலில், பட்டாபிராம், இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் இரவு வந்து இறங்கினார்.
அங்கிருந்து பட்டாபிராம், பாரதியார் நகரில் உள்ள மாமனார் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது. மர்ம நபர்கள் இருவர் அவரை வழிமறித்து தங்களைப் காவலர்கள் எனக்கூறி கொண்டு கார்த்திக் வைத்திருந்த உடமைகளை சோதனையிட்டனர்.
அப்போது கார்த்திக் காவல் உதவி மையம், அருகில் தான் உள்ளது அங்கு வைத்து என்னிடம் விசாரணை நடத்துங்கள் என அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்த சமயத்தில் திடீரென துப்பாக்கியை காட்டி மிரட்டி, கார்த்திக்கிடம் இருந்த வெள்ளி கட்டிகளை மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் எப்படியோ சுதாரித்துக்கொண்ட கார்த்திக், திருடன் திருடன் என சத்தம் போட்டார். இதையடுத்து அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் கூட்டாக சேர்ந்து கொள்ளையர்களை மடக்கினர் அதில் ஒருவன் மட்டும் வசமாக மாட்டிக்கொண்டான். மற்றொருவன் அங்கிருந்து தப்பியோடினான். அவனுக்கு தர்மஅடி கொடுத்து பட்டாபிராம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட கொள்ளையனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவன் திருச்சியை சேர்ந்த சுரேஷ், 32 என்பது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய செங்குன்றத்தை சேர்ந்த அவரது நண்பரான பாட்ஷா என்பவனை காவல்துறையின் தேடி வருகின்றனர். விலையுயர்ந்த பொருட்களையோ அல்லது பணத்தையோ கொண்டு செல்லும் போது தெரியாத நபர்களிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
Discussion about this post