உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் நிலத்திற்கு உரிமை கோரி ராம்லல்லா, நிர்மோகி அகரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கில் 40 நாட்கள் தொடர் விசாரணை நடத்தி வந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும், இஸ்லாமிய அமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடாக 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அயோத்தி வழக்கு: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
- நீதிமன்றம் நடுநிலையை காக்கும் பொறுப்பில் இருக்கிறது.
- மதங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை உச்ச நீதிமன்றம் மதிக்கிறது.
- ஒரு மத பிரிவினரின் நம்பிக்கையை மற்ற மதத்தினர் தொந்தரவு செய்ய கூடாது
- அயோத்தியில் காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை.
- நிலம் தொடர்பான தொல்லியல் துறையினரின் ஆய்வறிக்கையை நிராகரிக்க முடியாது
- ஆவணங்களின் படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது
- மத நம்பிக்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை
- பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கிருந்த கட்டடம் இஸ்லாமிய கட்டுமானம் அல்ல
- அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புகிறார்கள்
- அதே இடத்தை பாபர் மசூதி என்று இஸ்லாமியர்கள் அழைக்கிறார்கள்
- நிலத்தின் உரிமையை நம்பிக்கை அடிப்படையில் தேர்வு செய்ய முடியாது
- ஒரு மதத்தினரின் ஒட்டுமொத்த நம்பிக்கையில் உச்சநீதிமன்றம் தலையிடாது
- பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை
- 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல்
- அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 ஆக பிரித்து கொடுத்தது தவறு
- அயோத்தி நிலத்தை நிபந்தனையுடன் இந்து அமைப்புகளுக்கு வழங்க உத்தரவு
- இஸ்லாமிய அமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடாக 5 ஏக்கர் நிலம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
- 3 மாதத்தில் தீர்ப்பை செயல்படுத்த உத்தரவு
- அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி
- மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்
- சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்ட , ஒரு அமைப்பை 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும்
Discussion about this post