உயர்கல்வி துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 160 வது ஆண்டு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி அன்பழகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவிலேயே தமிழகம் தான் உயர்கல்வியில் முன்னோடியாக உள்ளது என்றார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் படிக்கும் மாநிலமாக இருப்பதும் தமிழகம்தான் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
மாணவர்கள் படிப்பதை ஊக்குவிக்கும் விதமாக இலவச பயண அட்டை முதல் இலவச மடிக்கணிணி வரை ஏராளமான சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருவதாக அவர் குறிப்பட்டார். சென்னை பல்கலைகழகத்தை பொறுத்தவரை சாதாரண மக்களும் கல்வி கிடைக்க முக்கியத்துவம் கொடுத்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
தற்போது 17 வது இடத்தில் உள்ள இந்த பல்கலைக்கழகம் விரைவில் முதல் இடத்திற்கு வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், புத்தகங்களை தூக்கும் மாணவர்கள் ஆயுதங்களை தூக்குவது வேதனையாக உள்ளதாக அவர் கவலைத் தெரிவித்தார். இந்த பல்கலைக்கழகத்தில் அண்ணா மற்றும் எம்ஜிஆர் பெயரில் சமூக வளர்ச்சி ஆய்வு மையம் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Discussion about this post