காஞ்சிபுரம் அத்திவரதரை சந்திக்க முண்டியடிப்பவர்களில் முதலிடத்தில் உள்ளனர் திமுக கட்சியினர். குங்குமப் பொட்டை ‘ரத்தமா?’ – என்று கேட்ட கருணாநிதி வழியில் நிற்பதாகக் காட்டிக் கொள்பவர்கள், நெற்றியில் வைக்கப்பட்ட திலகத்தை உடனே அழித்த ஸ்டாலினை தலைவராகச் சொல்லிக் கொள்பவர்கள், சத்தம் இல்லாமல் சாமி கும்பிடவும் தவறுவது இல்லை!.
தொலைக்காட்சியைத் தொடங்க பிள்ளையார் சதுர்த்தியை நாளாகத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, மகனுக்கு இளைஞரணியின் இளவரசராகப் பட்டம் சூட்ட நல்ல நேரம் பார்ப்பது வரை அத்தனையையும் செய்து கொண்டே, சிறுபான்மையினர் வாக்குக்காக நாத்திக வேடமும் போடுவதே திமுகவின் வழக்கம். இப்படி இரட்டை வேடம் போட்டு திமுக சிக்கிக் கொண்ட அத்தியாயங்களில் ஒரு புதிய அத்தியாயம்தான் அத்திவரதரை சந்திக்க அவர்கள் முட்டி மோதுவது.
முதலில் திமுகவின் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அத்திவரதரைப் போய் வார்த்துவிட்டு, அவருக்குப் பச்சைப் பட்டும் சார்த்தி, அர்ச்சகரரிடம் ரத்தம்… மன்னிக்கவும் குங்குமம் வாங்கி வந்தார். அவரைத் தொடர்ந்து திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய எம்.பி.க்கள் பலரின் குடும்பத்தினரும் அத்திவரதரைச் சென்று வணங்கி வருகின்றனர்.
பகுத்தறிவுப் பாசறையில் பட்டை தீட்டப்பட்ட கூர்வாளாக தங்களைச் சொல்லிக் கொள்ளும் திமுகவின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அத்தி வரதரை வணங்க வருவதாகவும், அவர்களுக்கு உதவிகள் செய்யும்படியும் கேட்டு அனுப்பும் கடிதங்கள் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு கடிதத்திலும் குறைந்தது 6 விவிஐபி பாஸ்கள் கேட்கப்பட்டு உள்ளன.
நாத்திகம் பேசி ஓட்டைத் திருடியவர்கள், அதன் மூலம் கிடைத்த பதவியை வைத்து, தங்களின் லெட்டர் பேடில் இருந்தே இந்தக் கடிதங்களை எழுதி உள்ளது இன்னொரு சிறப்பு.
குங்குமத்தை ரத்தம் என்றும், திரு மேனியைக் கல் என்றும் – பிரசாரங்களில் சொல்பவர்களின் பேச்சை அவர்களே நம்பவில்லையா? அல்லது அவர்களின் வீடுகளில் உள்ளவர்கள் மதிக்கவில்லையா? – என்று தெரியவில்லை.
எது எப்படியோ அத்திவரதரின் அருளால் திமுகவினரும் பண்பு உள்ள மனிதர்களாக மாறினால் அது அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல அனைவருக்குமே மகிழ்ச்சிதான்…
ஏனெனில், பிரியாணிக் கடை, செல்ஃபோன் கடை, அழகு நிலையம் – இவற்றில் எல்லாம் கூடி சண்டை போடுவதை விட நூறு கோடி மடங்கு சிறந்த செயல் – அத்திவரதரை சந்திக்க வரிசையில் நிற்பது. அந்த வகையில் இதை வரவேற்கலாம். பள்ளம் பறிப்பவர்களையும் பூமி தாங்குவது போல அவர்களுக்கும் அருள் பாலிக்கட்டும் நம் அத்திவரதர்.
Discussion about this post