மக்களவைக்கு 6 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. இன்னும் ஒரு கட்ட தேர்தல் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் அடுத்து ஆட்சி அமைப்பது குறித்து பல்வேறு நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என தலைவர்கள் சிலர் முயற்சித்து வருகிறார்கள்.
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து மாநில தலைவர்களை சந்தித்து மூன்றாவது அணிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். சென்னை வந்த சந்திரசேகர ராவ், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்துள்ளனர்.
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி குறித்து பேசவில்லை என்றால் டீ குடிப்பதற்காகவா சந்திரசேகர ராவ் சென்னை வந்தார் என்று மீன்வளத்துறை ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை விளாச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓட்டை கப்பலுக்கு 9 மாலுமிகள் என்பதுபோல் திமுக கூட்டணிக்கு 9 கட்சிகள் என விமர்சித்தார்.
Discussion about this post