சிபிஐ, ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் மீதான பாஜக அரசின் தலையீட்டை தடுக்க எதிர்க்கட்சிகள் ஒருமனதாக தீர்மானித்திருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பா.ஜ.கவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்க்கொள்வது குறித்து விவாதித்தனர். மேலும் நாடாளுமன்றத்தில் எழுப்பக்கூடிய பிரச்சனைகள் குறித்தும் ஆலோசித்துள்ளனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பல்வேறு அரசியல் சட்ட அமைப்புகளையும் பாஜக அரசு சீர்குலைக்கிறது என்றும் ரிசர்வ் வங்கியின் கவர்னரே செயல்பட முடியாமல் பதவி விலகிவிட்டார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
Discussion about this post