அரசு வேலைகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, 17-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்றாம் பாலினத்தவருக்கும் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த திருநங்கை சுதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்களில் 20 சதவீதம் பேர் 10-ம் வகுப்பை முடித்துள்ளதாகவும், 40 சதவீதத்தினர் பட்டபடிப்பு முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே, அவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு வேலைகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவும் சுட்டிக் காட்டப்பட்டது. இதனைதொடர்ந்து, இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Discussion about this post