இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய போலீசார் வந்திருப்பதாக படநிறுவனம் ட்வீட் செய்திருந்த நிலையில், அதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்தது.
விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. அரசியல் உள்நோக்கத்துடனும், அரசின் திட்டங்களை விமர்சிக்கும் வகையில் படத்தில் காட்சிகள் இடம்பெற்றதையடுத்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. படத்திற்கு எதிராக அ.தி.மு.க.வினர் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இதனையடுத்து, திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், நேற்று இரவு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸை கைது செய்வதற்காக அவர் வீட்டிற்கு போலீசார் சென்றதாக அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் டுவிட்டரில் பதிவு செய்தது. இதற்கு காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்வதற்காக செல்லவில்லை எனவும், வழக்கமான ரோந்து பணிகளுக்காகவே சென்றதாகவும் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post