2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், 19 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளும், 83 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை கிண்டியில், தொழில் வளர் தமிழ்நாடு முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு அமர்வு நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரோஸ்ட் அண்ட் சுலீவன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான விருதை முதலமைச்சரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், 5 ஆயிரத்து 27 கோடி ரூபாய் முதலீட்டில், 20 ஆயிரத்து 351 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 9 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டின் செயல் திட்ட வடிவம் மற்றும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ள திறன் மேம்பாடு குறித்த கையேட்டை முதலமைச்சர் வெளியிட்டார். தொடர்ந்து, பாதுகாப்புத் துறையின் டி.ஆர்.டி.ஓ மற்றும் ஐ.ஐ.டி சென்னையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறினார். ஸ்ரீபெரும்புதூரில், மூடப்பட்ட நோக்கியா நிறுவனத்தை, ஃபாக்ஸ்கான் நிறுவனம் இயக்க முன்வந்துள்ளதாகவும், இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.