தமிழக ஆந்திர எல்லையான திருத்தணி அருகே 825 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு குவாரிக்கு சீல் வைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பாலசமுத்திரத்தில் பெருமாள் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்குவாரியில் விதிமுறைகளுக்கு மாறாக வெடிகுண்டு வைத்துப் பாறைகளைத் தகர்ப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டதில் பாறைகளை வெடிக்கச் செய்யப் பயன்படும் 825 கிலோ ஜெலட்டின் குச்சிகளைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தலைமறைவாகியுள்ள பெருமாளைத் தேடி வருகின்றனர்.