இயற்கையுடன் ஒன்றியிருக்கும் 82 வயது முதியவர்

கட்டடங்கள் மட்டுமே சூழ்ந்த வாழ்வியல் சூழல் மனிதர்களுக்கு உகந்ததல்ல என்று கூறுகிறார் திருப்பூரை சேர்ந்த இயற்கை ஆர்வலர் வேலுச்சாமி. மரங்களுக்கும் இவருக்குமான உறவு அலாதியானதாக உள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்பொழுது காணலாம்.

திருப்பூரை சேர்ந்த வேலுச்சாமிக்கு 82 வயது என்று கூறினால் யாரும் நம்பமாட்டார்கள். ஏனென்றால் இந்த வயதிலும் பம்பரமாக சுழலும் வேலுச்சாமி, மரகன்றுகளை சைக்கிளில் எடுத்துச் சென்று வீடுவீடாக இலவசமாக கொடுத்து வருகிறார். பின்னலாடை நிறுவனங்கள் நிறைந்த திருப்பூரில் வசித்துவரும் இவர், வீட்டிற்கு ஒரு மரமாவது வளர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். திருப்பூர் அம்மாபாளையத்தில் தன்னுடைய 7 சென்ட் வீட்டை, மரங்கள், செடி கொடிகளால் நிரப்பியுள்ளார் வேலுச்சாமி.

வேம்பு, புங்கை, அகத்தி மரங்கள் என தொடங்கி, அரியவகை மூலிகைகள், கிழங்கு, கீரை என இவரது வீடே பசுமையாக காட்சியளிக்கிறது. இயற்கை மீதான இந்த ஆர்வமும் பற்றும் தனது சிறுவயது முதலே தன்னுடன் இருப்பதாக கூறுகிறார் வேலுச்சாமி. திருப்பூருக்கு குடிபெயர்ந்தது முதல் தனது இருப்பிடத்தில் மட்டுமின்றி, சுற்றுவட்டார பகுதிகள், சாலையோரங்களிலும் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு, பராமரித்து வருவதாக கூறுகிறார்.

இயற்கை முறையில் மரங்களை எப்படி வளர்ப்பது, எந்த அளவிற்கு தண்ணீர் பயன்படுத்துவது உள்ளிட்ட விவரங்களையும், அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார். மற்றவர்களுக்கு கொடுப்பதற்காகவே இவரது தோட்டத்தில் எப்பொழுதும் மரக்கன்றுகள் தயாராக உள்ளது. இலவச மரக்கன்றுகளை வாங்கிச் செல்பவர்களுக்கு, இயற்கை விவசாயம் குறித்த ஆலோசனைகளும் இலவசமாக கிடைக்கிறது.

இயற்கை மீதான தனது ஆர்வத்தின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மரங்களை வளர்ப்பதற்கென்றே தனது நண்பர்களுடன் இணைந்து ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறும் வேலுச்சாமி, அந்த இடத்தில் பலவகை மரங்களை வளர்க்க உள்ளதாகவும், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறைக்கு ஏற்படுத்த உள்ளதாகவும், தனது எதிர்கால திட்டம் குறித்து கூறுகிறார் வேலுச்சாமி.

 

Exit mobile version