சேலம் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து பல்வேறு கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மீது 803 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ரோகிணி தெரிவித்துள்ளார்.
100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் மாநகராட்சி சார்பில், ராட்சத பலூன் பறக்கவிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு பலூனை மாநகராட்சி கட்டடத்தின்மீது இருந்து ஆட்சியர் ரோகிணி பறக்கவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து இளம் வாக்காளர்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பு குழுக்கள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கூறிய ஆட்சியர், இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 5 கோடியே 72 லட்சம் ரூபாயும், 3 கிலோ தங்கம் மற்றும் 97 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.