தமிழ்நாடு முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி, முழு ஊரடங்கு நேற்றிரவு 10 மணி முதல் அமலுக்கு வந்தது.
இந்த நிலையில், மாநிலம் முழுவதும் 80 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை, பொது மக்கள் அனைவரும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் டிஜிபி திரிபாதி கேட்டுக்கொண்டுள்ளார்.
திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுக்கு செல்பவர்கள் அந்தந்த மாவட்டங்களில் அனுமதி பெற்ற கடிதங்களை கையில் வைத்திருக்க வேண்டும் எனவும், மருத்துவமனைக்கு செல்வோர் மருத்துவருடைய பரிந்துரை கடிதத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கின் போது, விதிமுறைகளை பின்பற்றாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.