விழுப்புரம் அருகேயுள்ள பழமையான பெருமாள் கோயில், 800 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டது என்ற தகவலை, அங்கிருந்த கல்வெட்டு மூலம் வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் அய்யூர் அகரம் கிராமத்தில் பழமையான வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் வரலாற்றுத்துறை பேராசிரியர்களான ரமேஷ், ரங்கநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், பல வியப்பூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. கோயில் கருவறையின் பின்புறம் இருந்த கல்வெட்டை கண்டறிந்த இக்குழுவினர், அதில் இருந்த தகவல்கள் மூலம், இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது என்பதை உறுதிபடுத்துகின்றனர்.
பிற்கால பாண்டிய மன்னன் மாறவர்மன் விக்ரம பாண்டியனின் ஆட்சிக்காலமான, 1301 இல் இவ்வூருக்கு ஸ்ரீ கோதண்டராம சதுர்வேதி மங்கலம் என பெயரிட்டு, அங்கு குடிபுகுந்த அந்தணர்களுக்கு பிரம்மதேயமாக வழங்கப்பட்டதை கல்வெட்டு குறிப்பிடுகிறது.. இதேபோல் கோயிலின் பல இடங்களிலும் பாண்டிய மன்னனின் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார், இதனை ஆய்வு செய்த வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ்.
பாட புத்தகத்தில் கண்ட கல்வெட்டுகள், தற்போது தங்கள் ஊரில் உள்ள கோயிலில் கண்டெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளதாக கூறியுள்ள பள்ளி மாணவர்கள், கல்வெட்டுகளில் உள்ள குறிப்புகளை ஆய்வாளர்கள் படித்துக்காட்டிய போது, விவசாயம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்று இருந்தது வியப்பாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பெருமாள் கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள இந்த கல்வெட்டு, பாண்டிய மன்னர்களின் தாராள குணங்களையும், அனைத்து சமய வழிபாடு கொண்டவர்களுக்கும் அவர்கள் அளித்த உரிமை, சுதந்திரம் ஆகியவற்றையும் எடுத்துரைக்கும் சான்றாக அமைந்துள்ளது.