முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளத்தில் கோவை, சேலம் உள்பட 8 மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதில், மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு அதிகாரிகளின் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்பட பல்வேறு விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த இணையதளத்தில் கோவை, சேலம் உள்பட 8 மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் கோவை மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், கோவை மாநகரில் திமுக அரசு காட்டிய மெத்தனத்தால், நோய் பரவல் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகளை அரசு முறையாக ஒதுக்கவில்லை என்றும், நோய் தடுப்பு வழிமுறைகளை சரியாக கையாளவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் கடுமையாக சாடியுள்ளனர். தம் மீது பழிச்சொல் வந்துவிடக் கூடாது என்பதற்காக பெயர் அளவில் கோவையில் ஆய்வு நடத்திவிட்டு சென்ற முதலமைச்சர், தனிப்பிரிவு இணையதளத்தில் கோவை மாவட்டத்தை புறக்கணித்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.