அக்ஷய பாத்திரம் தருவதாக கூறி இரண்டு கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்த 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த நவீன் குமார் என்பவரிடம், அக்ஷய பாத்திரம் என கூறி கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி 8 பேர் கொண்ட மர்ம கும்பல் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக காவல்துறைக்கு புகார் வந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், குடிப்பள்ளி ரயில் நிலையம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியே வந்த 2 கார் மற்றும் இருசக்கர வாகனம் காவல்துறையினரை கண்டதும் காரை நிறுத்தி விட்டு தப்பியோடினர். அவர்களை விரட்டி பிடித்த போது அக்ஷய பாத்திரம் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என தெரியவந்தது.
இதனையடுத்து 8 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 1 கோடியே 29 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 கார்கள் மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி உள்ளார் என்பதும், அவர் வேலூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாகவுள்ள மற்றொரு குற்றவாளியை தேடுவதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.