மேற்கு வங்கத்தில் 5ம் கட்ட சட்டப்பேரவை தேர்தலில் 78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல், 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 5 ஆவது கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குச்சாவடி மையங்களில் ஆயிரத்து 71 கம்பெனி படைகள், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஐந்தாம் கட்ட தேர்தலில், 78 புள்ளி 36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, வடக்கு 24 பர்கான் மாவட்டத்தில் உள்ள பிதான் நகரில் வாக்குச்சாவடி மையம் அருகே திரிணாமூல் காங்கிரஸ் – பாஜக தொண்டர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்ட இரு கட்சியினரையும் துணை ராணுவப்படையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.