தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், 76.19 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக நேற்று 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 5 மணிக்குள்ளாக வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், வாக்கு பெட்டிகள் அனைத்தும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. வாக்குச்சாவடிகளில் சீல் வைக்கப்பட்ட வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி, வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் 114 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டன. அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனிடையே, 27 மாவட்டங்களில் நடைபெற்ற முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், 76.19 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக பதிவான வாக்குப்பதிவு சதவீதம்:
புதுக்கோட்டையில் 80.69 சதவீதமும், திருப்பூரில் 73.84 சதவீதமும் வாக்கு பதிவாகி உள்ளது. நாமக்கல்லில் 79 சதவீதம், பெரம்பலூரில் 77.48 சதவீதம், திருச்சியில் 76.18 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. கோவையில் 77.23 சதவீதம், மதுரையில் 77.14 சதவீதம், நாகையில் 63.54 சதவீதம், திருவள்ளூரில் 77.66 சதவீதம், திருவண்ணாமலையில் 71.02 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ராமநாதபுரத்தில் 67.63 சதவீதம், சிவகங்கையில் 73.4 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டு கட்டமாக பதிவான வாக்குகள் ஜனவரி 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன.