இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப்படைகளை ரஷ்யா வென்றதன் 75வது தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. கடந்த 1941ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில், ஜெர்மனியின் நாஜிப் படைகளை, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ படைகள் தோற்கடித்தன. இதன் 75 வது வெற்றி தினம் ரஷ்யாவில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. ரஷ்ய ராணுவத்தின் 216 படைப் பிரிவுகளை சேர்ந்த 13 ஆயிரம் ராணுவ வீரர்கள் இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றனர். இவற்றைத் தவிர ரஷ்ய விமானப் படையின், ராணுவ டாங்குகள், அதிவேக விமானங்கள், ராக்கெட் ஏவுதளங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவையும் அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றன. ரஷ்யாவைத் தவிர இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற இந்தியா, சீனா உள்ளிட்ட 19 நாடுகளின் ராணுவங்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்திய ராணுவத்தின் முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் இந்தியா, அஜர்பைஜான் உள்ளிட்ட ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ரஷ்ய அதிபர் விளாமிடிர் புதின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றினார். ரஷ்ய ராணுவத்தினால் ஐரோப்பிய கண்டம் சுதந்திர காற்றை சுவாசிப்பதாகவும், நாஜிப்படைகளிடமிருந்து ஜெர்மன் மக்கள் பாதுகாக்கப்பட்டதாகவும் அவர் உரையாற்றினார்.