உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில், 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75-வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மேலும், இந்தியாவுக்கும், உலக உணவு மற்றும் வேளாண் அமைப்புக்கும் உள்ள நீண்டகால தொடர்பைக் குறிக்கும் வகையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, 75 ரூபாய் சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளார்.
உயிரி தொழில்நுட்பத்தில் செறிவூட்டப்பட்ட 8 பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உலக உணவு அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது மிகப்பெரிய சாதனை என்று கூறினார். உலக உணவு அமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு, வரலாற்றுச் சிறப்புவாய்ந்தது என்றும், பெருமிதம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, இந்திய உணவு மற்றும் வேளாண் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் காணொலி மூலம் பங்கேற்றனர்.