தமிழ்நாட்டில், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 75 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வரம்புக்குள் வராத அனைத்து அரசுத்துறை பணியிடங்களும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையில் தான் நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது அவசியமாகும்.
அதன்படி ஆண்டுதோறும் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடிப்பவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, மூன்று வருடத்திற்கு ஒருமுறை புதுப்பித்து வருகின்றனர்.
கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை, மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது.
அதில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 75 லட்சத்து 31 ஆயிரத்து 122 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 39 லட்சத்து 94 ஆயிரத்து 898 பெண்கள், 232 பேர் மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர்.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 25 ஆயிரத்து 668 பேர் என்றும், 19 முதல் 23 வயதுடைய கல்லூரி மாணவர்கள் 15 லட்சத்து 50 ஆயிரத்து 245 பேர் என்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.