சேலத்தில் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 73 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மாவட்ட ஆட்சியர் ரோகினி முன்னிலையில் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சேலம் மாவட்டம் கொண்டாலாம்பட்டி புறவழிச் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நள்ளிரவில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக வந்த கரை பறிசோதனை செய்ததில் பெட்டி பெட்டியாக தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வாகனத்தில் இருந்தவர்கள் கொடுத்த ஆவணங்களில் சந்தேகம் ஏற்பட்டதால் 73 கிலோ நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த ஆவணங்களின் உண்மைதன்மை குறித்து விசாரிக்க வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் அலுவலருமான ரோகிணி முன்னிலையில் பறிமுதல் செய்த நகைகள் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
மும்பையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகை கடைகளுக்கு விநியோகம் செய்ய கொண்டு வரப்பட்டதாக காரில் வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வருமானவரி துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.