வேலூர் மக்களவை தேர்தலில் 72 சதவிகிதம் வாக்குப்பதிவு

வேலூரில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்த நிலையில், 72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

திமுக-வினரின் பணப்பட்டுவாடாவால் வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. காலையில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு, மதியத்திற்கு பிறகு விறுவிறுப்படைந்தது. அசம்பாவித சம்பவங்கள் எதுவுமின்றி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.

வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து, இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்போடு, வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பதிவான வாக்குகள் வருகிற 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை எண்ணப்படுகின்றன.

இந்த நிலையில், வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரம், நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவித்தார். கடந்த இரண்டு மக்களவை தேர்தல்களைவிட, இந்த தேர்தலில், வாக்கு சதவீதம் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version