70வது குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லியில் 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 70வது குடியரசு தினவிழா கொண்டாட்டத்திற்கு தலைநகர் டெல்லி தயாராகி வருகிறது. இந்நிலையில், அங்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இருவர் கைதாகி உள்ளதால் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காஷ்மீரை சேர்ந்த தீவிரவாதிகள் இருவரும் டெல்லியில் கைதாகி உள்ளனர்.
இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து காவலர்கள் உள்பட 25 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். குடியரசு தினவிழாவையொட்டி நாளை முப்படைகளின் அணிவகுப்பு உள்ளிட்டவை நடத்தப்படும் நிலையில், ராஜபாதையில், சிசிடிவி கேமராக்கள் மற்றும் முக அடையாள கேமராக்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
ராஜபாதையில் இருந்து செங்கோட்டை வரை அணிவகுப்பு செல்லும் பாதையில் துப்பாக்கி சுடும் வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
வான்வழி பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில் விமான எதிர்ப்பு பீரங்கிகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகமாக கூடும் மார்க்கெட்டுகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். இதேபோன்று, மெட்ரோ நிலையங்கள், விமான நிலையத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுளது.