ஒவ்வொரு நாடும் கொரோனாவை ஒழிக்க என்ன வழி? புது மருந்து கண்டுபிடிப்பது? என்று யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில், சில ஆப்பிரிக்க நாடுகள், பள்ளிக்குச்செல்லும் இளம் பெண் குழந்தைகளை தாயாக்கும் வேலையில் மும்முரம் காட்டிக்கொண்டிருக்கின்றன. மலாவி, கிழக்கு ஆப்பிரிக்க நாடான இங்கு தொடர்ந்து பெண்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடப்பது சாதாரணம். இதற்கு எதிராக யுனிசெப், சர்வதேச குழந்தைகள் நல பாதுகாப்பு மையங்கள் என்று பல அமைப்புகளும் பாடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் விழிப்புணர்வை எல்லாம் தூக்கி தூர வீசிவிட்டு, வன்புணர்வில் ஈடுபட்டிருக்கிறார்கள் அந்நாட்டின் சில ஆண்கள். கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க 3 மாதங்களாக லாக்டவுனை அறிவித்திருக்கிறது மாலாவி அரசு. கொரோனாவை ஒழிக்க வீடுகளுக்குள்ளேயே இருங்கள் என்று அரசு சொன்னதை கேட்டு வீட்டில் இருந்தவர்கள், விளையாடும் பெண்களின் வாழ்க்கையை வேட்டையாடி இருக்கிறார்கள்.. காமக் கயவர்களின் பாலியல் இச்சைக்கு அந்நாட்டில் சுமார் 7000 பெண் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை இழந்து நிற்கின்றனர். அதுவும் 10 முதல் 14 வயதுவரை உள்ள பெண்குழந்தைகளையே தேடிப்பிடித்து, வாட்டி வதைத்து, வன்புணர்வில் ஈடுபட்டு அவர்களை கர்ப்பமாகியிருக்கிறார்கள். குழந்தை பொம்மையோடு விளையாட வேண்டிய வயதில் கையில் குழந்தை ஏந்த வைத்திருப்பதை என்ன சொல்வது?
சிலநாட்களுக்கு முன்னர்தான், இதேபோன்று, மற்றொரு ஆப்பிரிக்க நாடான கென்யாவிலும் வெறும் 3 மாதங்களில் சுமார் ஒன்றரை லட்சம் பெண்குழந்தைகள் பாலியல் வன்புணர்வுகளுக்கு ஆளாகி கருத்தரித்திருக்கின்றனர். அந்நாட்டில், 1000-ல் 82 சிறுமிகள் இதுபோன்று இளம் பருவத்திலேயே வன்புணர்வுகளுக்கு ஆளாவதோடு, கருத்தரிக்கிறார்கள் என்ற புள்ளி விபரங்களைப் பார்க்கும்போது இவர்களைத் திருத்த என்னதான் செய்வது என்ற ஆதங்கத்தோடு கோபமும் கொப்பளிக்கிறது.