சென்னையில் வசித்துவரும் 70 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியரை ஆபாசமாகத் திட்டி, மிரட்டிய தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னை பெரவள்ளூர், பேப்பர் மில் சாலையில் வசித்து வருபவர் சந்திரசேகரன்(70). இவர் திருவள்ளூர் மாவட்டம் மண்டல அலுவலகத்தில் சர்வேயராக இருந்து ஓய்வுபெற்றவர். இவர் வசித்துவரும் வீட்டின் வாடகையை கொரோனா காரணமாக தாமதமாக கொடுக்க நேர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இதனால், வீட்டின் உரிமையாளர் வீரராகவன் முதியவர் சந்திரசேகரனிடம் பிரச்னை செய்துள்ளார். மேலும், மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் கொளத்தூர் தொகுதியின் தி.மு.க. பகுதிச்செயலாளர் முரளிதரனை சந்திரசேகரன் குடியிருக்கும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வாடகைப் பணத்தைக் கேட்டும், வீட்டை உடனடியாக காலிசெய்ய வேண்டும் என்றும் மிரட்டியதுடன், தகாத வார்த்தைகளைக் கூறி அபாசமாக திட்டியதாகவும் பெரவள்ளுர் காவல்நிலையத்தில் முதியவர் சந்திரசேகரன் முறையிட்டார்.
அவரின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் பொறுப்பில் இருக்கும் பகுதியின் அந்தக் கட்சியின் செயலாளர் இப்படி ஒரு புகாருக்கு ஆளாகியிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.