ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
எதிர்வரும் பண்டிகை காலங்களை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், சென்னை எழும்பூர், புதுச்சேரி, திருவனந்தபுரம், எர்ணாகுளம், ராமேஸ்வரம் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, யஸ்வந்த்பூர் – கண்ணூர், செகந்திராபாத் – திருவனந்தபுரம் ஆகிய இரண்டு சிறப்பு இரயில்கள் இருவழி பயணமாக தினசரி இயக்கப்படுகிறது. கயா – சென்னை எழும்பூர், புவனேஸ்வர் – புதுச்சேரி, பரௌனி – எர்ணாகுளம், மாண்டியா – ராமேஸ்வரம், கோரக்பூர் – திருவனந்தபுரம் ஆகிய சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்கள் வாரம் ஒரு முறை இரு வழிப்பாதையாக இயக்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.