அமெரிக்க நகரில் 7 மாத குழந்தை மேயர் : சிறப்பு தொகுப்பு

அமெரிக்காவில், வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் என்ற 7 மாத ஆண் குழந்தை, மேயர் ஆகி உள்ளார். அமெரிக்க வரலாற்றில் மிகச்சிறிய வயதில் மேயர் ஆன பெருமையையும் சார்லி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒயிட்ஹால் நகரின் தீயணைப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்டுவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் அந்த நகரின் கவுரவ மேயர் பதவி ஏலம் விடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஏலம் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. இதில் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் என்ற 7 மாத ஆண் குழந்தை ஏலத்தை வென்று கவுரவ மேயர் பதவிக்கு தேர்வானது.

மேயர் சார்லி’ என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒயிட் ஹாலில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு, தன்னுடைய கவுரவ மேயர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

பதவி ஏற்பின்போது மேயர் சார்லி சார்பாக பிராங்க் என்பவர் பேசினார். அப்போது ‘‘வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் ஆகிய நான் மேயர் பதவியை மனதார ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு உண்மையாகவும் இருப்பேன். விளையாட்டு மைதானத்தில் அனைவரிடமும், கனிவாகவும் அன்புடனும் இருப்பேன். தீயணைப்பு துறை வீரர்களுக்கு பிஸ்கட் எடுத்துச் செல்வேன். எனது நாட்டை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பேன். அதற்காக அம்மாவும், அப்பாவும் உதவி செய்ய வேண்டும்’’ என கூறினார்.

இதுகுறித்து மேயர் சார்லியின் வளர்ப்புத்தாய் நான்சி கூறுகையில் , ‘‘எந்தவித பாகுபாடுமின்றி மேயர் சார்லி அனைவரையும் நேசிப்பார். அனைவரின் ஒற்றுமைக்காகவும் உழைப்பார். ‘அமெரிக்காவை மீண்டும் கனிவான நாடாக உருவாக்குவேன்… ’ Make America Kind Again என்பதே அவரின் அரசியல் முழக்கம்’ என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலர், நான் மேயர் சார்லியை விரும்புகிறேன் போன்ற கேப்ஷன்களோடு, சார்லியின் கியூட்டான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களோடு பகிர்ந்து வருகின்றனர்.

Exit mobile version