தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து 7 பேர் கொண்ட குழு அமைப்பு!!

புதிய கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகளை அரசுக்கு வழங்குவதற்காக, உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைகளை வழங்க இரண்டு குழுக்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், முதற்கட்டமாக, உயர்கல்வித்துறையில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக ஆராய, உயர்கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன், காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் தாமரைச் செல்வி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். உயர்கல்வித்துறையில், தமிழக அரசின் கொள்கைகளைப் பின்பற்றி தேசிய கல்விக் கொள்கையை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது மற்றும் மாற்றங்கள் செய்வது ஆகியவை தொடர்பாக இந்தக் குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

Exit mobile version