கடந்த மூன்றரை ஆண்டுகளில் 7 இலட்சம் பேருக்கு, 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப் பட்டிருப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் பேருந்து நிலையத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் பயணிகளுக்கு, 3 ஆண்டு சாதனை திட்ட கையேட்டையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, காற்றாலை மூலமாக 8 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரமும், சூரிய மின்சக்தி மூலமாக 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுவதாகத் தெரிவித்தார். இது இந்திய அளவிலான உற்பத்தியில் 43 சதவீதம் எனக் கூறினார். வீடுகள்தோறும் சூரிய மின் உற்பத்தி செய்யும் திட்டம் விரைவில் 100 சதவீதத்தை அடையும் என்றும் மின்துறை அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டார்.