சென்னையில் புத்தாண்டு இரவில் 27 இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில், 7 பேர் உயிரிழந்தனர். இரண்டு காவல் ஆய்வாளர்கள் உட்பட 25 பேர் காயம் அடைந்தனர்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில், கல்லூரி மாணவர் தங்கவேலு உயிரிழந்தார். அதேபோன்று, புழல் சிறைச்சாலை அருகே வழக்கறிஞர் ராமலிங்கம் என்பவர் லாரி மோதி பலியானார். எண்ணூரில் மீன் வியாபாரி சுந்தர் சென்ற இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார். குமணன் சாவடி அருகே ஆட்டோ மோதியதில், முகமது என்பவர் பலியானார். சாந்தோம் பேராலயம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில், பெண் மற்றும் குழந்தை படுகாயம் அடைந்தனர். சென்னை எழும்பூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயசித்ரா மீது ஆட்டோ மோதியதில் அவர் காயம் அடைந்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தரமணி சட்டம் – ஒழுங்கு ஆய்வாளர் புஷ்பராஜ் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் காயம் அடைந்தார். காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி காரில் 6 பேர் சென்று கொண்டிருந்தனர். இருங்காட்டுக்கோட்டை அருகே எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.