அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டமுன்வடிவுக்கு, அதிமுக ஒருமனதாக ஆதரவு

சட்டப்பேரவையில், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை அதிமுக ஒருமனதாக ஆதரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவை முதலமைச்சர் தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசு கொண்டு இந்த சட்ட முன்வடிவை அதிமுக ஆதரிப்பதாக தெரிவித்தார்.

 அரசு பள்ளியில் 40 சதவீத மாணவர்களில் 3 புள்ளி 5 சதவீத மாணவர்கள் மட்டுமே உயர்கல்வியில் சேரும் நிலை இருப்பதாகக் கூறிய அவர், இதனை தனியாருக்கு இணையாக அரசு உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 நீட் தேர்வினால் ஏழை எளிய மாணவர்களின் கனவு பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

அதிமுக அரசை பின்பற்றி தற்போது பொறியியல் படிப்பிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version