முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரும் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத்தொடர்ந்து, சட்டப்பிரிவு 161ஐ பின்பற்றி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய, தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையின் முடிவு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தச் சூழலில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே டெல்லி வந்துள்ளார். அவரை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து உரையாடி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏழு பேரின் விடுதலையை தடுக்கும் விதமாக அவர்கள் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ராஜபக்சேவின் டெல்லி பயணம் தமிழ் ஆர்வலர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 7 பேரின் விடுதலையை தடுப்பதால் சுப்ரமணியசாமிக்கு என்ன பயன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.