கீழடி அருகே உள்ள கொந்தகையில் 6-ஆம் கட்ட அகழாய்வை பிப்ரவரி 19-ஆம் தேதி அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்.
மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கொந்தகையில் தமிழக அரசின் சார்பாக 6-ஆம் கட்ட அகழாய்வு நடைபெறவுள்ளது. இது குறித்து பொங்கலுக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழக தொல்லியல்துறையின் சார்பாக கடந்த சில வாரங்களாக நில உரிமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பெறுகின்ற பூர்வாங்கப் பணிகளும், ஆய்வுப் பணிகளும் நடைபெற்று வந்தன.
இதனையடுத்து, வருகின்ற பிப்ரவரி19-ஆம் தேதி அன்று கொந்தகையில் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆய்வுப் பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.