69 நாட்களுக்கு பகல்: அதிசயிக்க வைக்கும் சம்மரோய் தீவு…

நிலவில் 14 நாட்களுக்கு பகல் இருக்கும் – என்பதே நமக்கு ஆச்சர்யத்திற்கு உரிய செய்திதான் எனும் நிலையில், 69 நாய்களுக்கு பகல் மட்டுமே உள்ள ஒரு தீவு இந்த உலகில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா உங்களால்? – நேரம் என்ற ஒன்றே இல்லாத சம்மரோய் தீவு குறித்துப் பார்ப்போம்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயின் எல்லைக்கு உட்பட்ட ஒரு தீவுப்பகுதிதான் சம்மரோய். 84 கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இந்தத் தீவு மீன்பிடித்தலுக்கும், வெண்மணல் கடற்கரைக்கும் பெயர் பெற்ற சுற்றுலாப் பகுதியாக உள்ளது.

சம்மரோய் – என்ற நார்வேஜிய மொழிச் சொல்லுக்கு ‘கோடைக் காலத் தீவு’ – என்பது பொருள். ஏனென்றால் ஆண்டுதோறும் மே மாதம் 18ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 26ஆம் தேதி வரையிலான 69 நாட்களுக்கு இங்கு சூரியன் மறைவதே இல்லை. நள்ளிரவில் மேலிருந்து கீழாக மறைய வேண்டிய சூரியன், இடமிருந்து வலமாக நகர்ந்து செல்வதால் பகல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அதுபோல நவம்பர் முதல் ஜனவரி வரை இங்கு சூரியன் கண்ணுக்குத் தெரிவதும் இல்லை. துருவப்பகுதியான ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கில் இந்தத் தீவு உள்ளதால் உலகின் மற்ற பகுதிகளின் நாளும், நேரமும் இங்குள்ள மக்களுக்குப் பொருந்துவது இல்லை!.

69 நாட்களுக்கு இரவு என்பதே இல்லை என்ற நிலையில் தங்கள் தீவை ’நேரமற்ற மண்டலம்’ – என்று அறிவிக்கும்படி சம்மரோய் மக்கள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். உலகில் பிறந்த அனைத்து மக்களுக்கும் பொதுவானது – என்று நேரம் மட்டுமே கருதப்பட்டுவரும் நிலையில், தங்களை நேரமற்றவர்களாக அறிவிக்கக் கோரிய சம்மரோவ் மக்களின் இந்தக் கோரிக்கை சர்வதேச அளவிலான கவனத்தை அந்த சிறிய தீவின் மீது குவித்து உள்ளது.

 

Exit mobile version