இந்தித் திரைப்பட இயக்குநர் ராகுல் ராவைல் தேர்வுக்குழு உறுப்பினர்களுடன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கரை சந்தித்து 66வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கலைஞர்களின் இறுதிபட்டியலை வழங்கினார். அதன்பிறகு பிற்பகல் மூன்று மணியளவில் ராகுல் ராவைல் விருதுகளை அறிவித்தார்.
சிறந்த திரைப்படமாக ஹெல்லரோ என்ற குஜராத்தி திரைப்படம் தேர்வானது. சிறந்த இயக்குநராக Uri The Surgical Strike திரைப்படத்தை இயக்கிய ஆதித்ய தார் அறிவிக்கப்பட்டார். உரி பகுதியில் நுழைந்து பாகிஸ்தானின் தீவிரவாத நிலைகளை இந்திய ராணுவம் தாக்கி அழித்ததை அடிப்படையாக்க் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
சிறந்த நடிகைக்கான விருது மஹாநதி திரைப்படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு அறிவிக்கப்பட்டது. பழம்பெறும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான மகாநதியில் கீர்த்தி சுரேஷின் நடிப்பைப் பாராட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மகாநதி திரைப்படம் சிறந்த ஆடை வடிவமைப்பு பிரிவிலும் தேசிய விருதுக்குத் தேர்வானது.
காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்த ’Awe’திரைப்படத்திற்கு சிறந்த ஒப்பனை மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பிரிவில் இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதேபோல் மிகப்பிரம்மாண்ட ஆக் ஷன் திரைப்படமாக வெளியான கே.ஜி.எஃப் திரைப்படமும் சிறந்த சண்டை அமைப்பு மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பிரிவில் தேசிய விருதுக்கு தேர்வானது.
சிறந்த தமிழ்த் திரைப்படமாக முதியோர்களின் அவலங்களைப் பேசிய பாரம் திரைப்படம் அறிவிக்கப்பட்டது. ப்ரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஏற்கனவே கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டு கவனம் ஈர்த்தது. தற்போது சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது.
சிறந்த அறிவியல் தொழில்நுட்ப திரைப்படப் பிரிவில் விழுப்புரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் இயக்கிய ஜிடி நாயுடு-தி எடிசன் ஆப் இந்தியா திரைப்படம் தேர்வாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ரஞ்சித்குமார் மிகுந்த சிரத்தை எடுத்து இந்த திரைப்படத்தை எடுத்துள்ளார். தேசிய அளவில் அவரின் கலையார்வத்திற்கும் உழைப்பிற்கும் தற்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சிறந்த சமூக அக்கரையுள்ள திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Padman திரைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கபட்டது. அதேபோல் சிறந்த சண்டை அமைப்புப் பிரிவில் தேர்வாகியுள்ள கே.ஜி.எஃப் திரைப்படத்தில் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாக தமிழகத்தைச் சேர்ந்த இரட்டையர்களான அன்பு அறிவு பணியாற்றியுள்ளனர்.
66வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் சினிமாவுக்கு இரண்டு விருதுகள்தான் அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும், இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள திரைப்படங்களில் மூன்று திரைப்படங்களில் தமிழர்களின் பங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.