60 வயது மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்ற 65 வயது கொடூர கணவர்!!

60 வயது மனைவியின் மீது பெட்ரோலை ஊற்றி, நெருப்பு வைத்துக் கொலை செய்த 65 வயது கணவர், காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்தச் சம்பவம் திருப்பத்தூரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய ஒரு விரிவான செய்தித் தொகுப்பு… 

திருப்பத்தூர் மாவட்டம், தியாகி சிதம்பரநாதன் பகுதியைச் சேர்ந்தவர் சேஷாசலம். இவர் திருப்பத்தூரில் உள்ள நகைக்கடையொன்றில் குமஸ்தாவாகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு 60 வயதில் மல்லிகா என்ற மனைவியும், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். சேஷாசலம் மற்றும் மல்லிகாவின் மூன்று குழந்தைகளுக்கும் திருமணமாகி அவர்கள் தனியாக வசித்து வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சேஷாசலத்திற்கு வெண்குஷ்டம் பிரச்சினை ஏற்பட்டு, அவரது உடலில் வெள்ளைத் தழும்புகள் அதிகரித்துக் கொண்டே வந்தன. அப்போது முதல் சேஷாசலத்தை மல்லிகா புறக்கணிக்கத் தொடங்கினார். நாட்கள் செல்லச் செல்ல, அதிகமாக சேஷாசலத்தை அவமதிப்பதும், அலட்சியம் செய்வதுமாக இருந்த மல்லிகா, குடியாத்தத்தில் உள்ள அவரது தங்கையின் கணவர் மற்றும் வேறு சில ஆண்களுடன் செல்போனில் பேசிப் பழகியும் வந்துள்ளார். அதுதொடர்பாக கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு சேஷாசலம், வேலை முடித்து வீட்டுக்கு வந்தபோது, மல்லிகா வீட்டில் இல்லை. அதையடுத்து சேஷாசலம், மல்லிகாவைத் வீட்டு மாடியில் போய்த் தேடிப்பார்த்தபோது, அங்கிருந்த மல்லிகா செல்போனில், வேறொருவரிடம் சந்தோஷமாகப் சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில் கடும் மன உளைச்சலிலும், ஆத்திரத்திலும் இருந்த சேஷாசலம், நள்ளிரவு நேரத்தில், தூங்கிக் கொண்டிருந்த மல்லிகா மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்தார். அதில், உடல் முழுவதும் தீப்பற்றிய மல்லிகா கடும் அலறலுடன், சம்பவ இடத்திலேயே பலியானார். அதையடுத்து, நேராக திருப்பத்தூர் நகர காவல்நிலையத்திற்குச் சென்ற சேஷாசலம், அவரது மனைவியை பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு சரணடைந்தார்.

சேஷாசலத்தின் வாக்குமூலத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். அதையடுத்து, திருப்பத்தூர் நகர காவல்நிலைய காவல் ஆய்வாளர் பேபி தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, கருகிய நிலையில் இறந்து கிடந்த மல்லிகாவின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், காவல்துறையினர் சேஷாசலத்தைக் கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

முதிய வயதில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டிய கணவன்-மனைவி, அப்படியில்லாமல் போனதும்…. 65 வயதில் 60 வயது மனைவியை நெருப்பு வைத்துக் கணவனே கொலை செய்ததும், திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Exit mobile version