17-வது மக்களவை தேர்தலின் 6-வது கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
6-வது கட்ட தேர்தலில் பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், அரியானா மற்றும் டெல்லி ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்களான திக்விஜய் சிங் மற்றும் ஷீலா தீட்சித் உள்ளிட்டோரின் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் ஒருசில இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இருப்பினும் பெரிய அசம்பாவிதம் ஏதுமின்றி 6-வது கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
6-வது கட்ட மக்களவை தேர்தலில் சராசரியாக 63 புள்ளி 49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 80.35 சதவீதமும் குறைந்தபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 54.74 சதவீத வாக்குகளும் பதிவாகியிருகின்றன. அதேசமயம் பீகாரில் 59.29 சதவீதமும், அரியானாவில் 68.34 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 64.76 சதவீதமும், ஜார்கண்டில் 64.50 சதவீதமும் டெல்லியில் 59.73 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.