61 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம், 20 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு ஆகிவற்றை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், சென்னை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையராக சுதாகரும், அண்ணாநகர் துணை ஆணையராக முத்துச்சாமியும் நியமனம் செய்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக மனோகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் பூக்கடை துணை ஆணையர் அரவிந்தன், திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளராகவும், உளவுத்துறை காவல் கண்காணிப்பாளராக இருந்த கண்ணன் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து காவல் துணை ஆணையராக இருந்த பகலவன் அடையாறு துணை ஆணையராகவும், அடையாறு துணை ஆணையராக இருந்த சேஷங் சாய், சென்னை மத்திய குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் பல்வேறு பகுதிகளுக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், 20 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்களுக்கு, காவல்துறை கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜெயச்சந்திரன், செந்தில்குமரன், மோகன்ராஜ் உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.அறிவிக்கப்பட்ட பெயர்களில் தகுதி வாய்ந்தவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தால் இரண்டு மாத காலத்திற்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறை ஆய்வாளர்கள் 9 பேரை பணியிடமாற்றம் செய்து டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மைதிலி, ஜாப்பர் உஷைன் உள்ளிட்டோர் சென்னை, கோவை, சேலம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் காலியாக உள்ள 9 பணியிடங்களை நிரப்ப உள்ளனர்.
காவல்துறை உதவி ஆணையர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் 19 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட காவல் அலுவலராக உள்ள கிரிஸ்டோபர், சென்னை கூடுதல் காவல் இயக்குநராகவும், கடலூர் காவல் அலுவலராக உள்ள சரஸ்வதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் ஆயுதப்படை மற்றும் போக்குவரத்து காவல் துறையில் இருந்து சென்னை, மதுரை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.