வண்டலூர் அருகே இன்று மாலை நடைபெறும் அதிமுக கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரதமர் வருகையையொட்டி, சென்னையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் அ.தி. மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கம் பகுதியில் அதிமுக கூட்டணி கட்சிகளின் பிரசார பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இதில், கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, சென்னை வரவுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். முன்னதாக நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், மத்திய அரசின் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். சென்னை அடையாறு எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிலையை காணொலி காட்சி மூலம் பிரதமர் திறந்து வைக்கிறார். கூட்டணி கட்சிகளின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதை ஒட்டி, 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.